புதன், 23 மே, 2012

கக்கனை பார்த்த எம்.ஜி.ஆர் அதிர்ந்து போனார்


       தற்போதைய சூழ்நிலையில் எத்தகையவர்களும் சூழ்நிலையால் தவறு செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதுவும் அரசியல் என்று எடுத்துக்கொண்டால் தற்போது உள்ளவர்கள் யாரும் யோக்கியமானவர்கள் கிடையாது என்பதை வெளிப்படையாகவே கூறலாம்.


தமிழ்நாட்டு அரசியல்  அது  மோசமாக போய்க்கொண்டிருக்கிறதாய் தான் கூறவேண்டும்.


இந்த சூழ்நிலையில்  ஒரு புனிதர். மாசு மறுவற்ற எந்த ஒரு சுய லாபத்தை எதிர்பார்க்காமல் புகழின் உச்சிக்கு சென்றவர்.. அவரை நாம் மறந்திருக்கலாம்.. ஆனால் அவரின் செயல்களை நாடறியச் செய்வது நம் கடமை. நம் பாரதத் திருநாட்டில், சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், பின்பும், அரசியல் வாழ்க்கையை தவமாய் எண்ணி வாழ்ந்த உத்தமர் கக்கன்.


"கக்கன்".. காலம் முற்றாக மறந்து விட்ட பெயர். மதுரை மேலூர் வட்டத்தில் "தும்பைப்பட்டி" என்ற சிற்றூரில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் கக்கன் பிறந்து நூறாண்டாகிறது. காமராஜரையே மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்கள் கக்கனையா நினைவில் நிறுத்தி போற்றப்போகிறார்கள்...? பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து முடித்து பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.


சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டது போல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.


காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனை தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.


பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்த கூரை கூட இல்லாத, பரம ஏழையாக, பேருந்தில் நின்ற படி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்ற போது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, "வேண்டாம்" என்று மறுத்து விட்டார். "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்" என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், "நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி" என்று கைகூப்பினார் கக்கன்.


மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாக தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்த போதும் தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.


இன்று அந்த இடம் ஒரு கோடிக்கு மேல் பெறும். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது. அவருக்குத் தனியாக ஒரு சமாதி வைக்கவில்லை. இன்று கக்கனை யார் நினைக்கிறார்கள்..?

அவர் செய்த ஒரே பாவம் தாழ்த்தப்பட்டோர் இனத்தில் பிறந்து தான்... அதுவும் தோட்டி மகனாகப் பிறந்தது தான். பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்னும் வர்ணாசிரம அகராதியில், அவர் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டார்.

புடம் போட்ட பத்தரை மாற்றுத் தங்கம், மனிதரில் புனிதர், அரசியலில் கரை படியாத சுத்தமான கைக்கு சொந்தக்காரர், எளிமையின் இலக்கணம் கக்கனை விட உயர்ந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை எவருமில்லை. இனியும் பிறக்கப் போவதும் இல்லை. இது சத்தியம்...!!!!

(இது என்னுடைய சொந்தக் கட்டுரை இல்லை..எனக்கு இ-மெயில் மூலம் வந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். பாராட்டுக்களும், புகழுரைகளும் கட்டுரையாளரையே சாரும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக