புதன், 23 மே, 2012

முனைவர் க.கைலாசபதி




க.கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) - ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தந்தை தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.

தொழில்

பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.

பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.

இலக்கியப் பணி

ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

இவரது ஆக்கங்கள்

இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.

மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.

இவரது நூல்கள்

* அடியும் முடியும்
* பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்
* தமிழ் நாவல் இலக்கியம்
* இலக்கியச் சிந்தனைகள்

பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) - பற்றி முனைவர் மு. இளங்கோவன்

முனைவர் க.கைலாசபதி

இலங்கை என்றதும் தமிழ் இலக்கிய உலகம் இரண்டு பேராசிரியர்களை இணைத்து நினைவு கூர்வது உண்டு.முதலாமவர் க.கைலாசபதி.மற்றவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி ஆவார்.இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும் தமிழ் ஆய்வாளர்கள் இவரின் ஆய்வினை உற்று நோக்கத் தொடங்கினர்.இவர் பார்த்த பார்வையில் இலக்கியங்களைப் பார்க்கத் தொடங்கினர் என்றால் பொருத்தமாக இருக்கும்.

இவர் தமிழகத்திற்கு வந்து அறிமுகம் ஆவதற்கு முன்பே இவரின் ஆய்வுத் தாக்கத்துக்கு ஆளான அறிஞர்கள் அதிகம்.சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும்,சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் கண்டுகாட்டிய ஆய்வு உண்மைகள் தமிழ் அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது. மேல்நாட்டினருக்குச் சங்க இலக்கியங்களை உரிய வகையில் அறிமுகம் செய்துவைத்தவர் இவர் எனில் சாலப் பொருத்தமாக அமையும்.இலக்கியத் துறையில் ஈடுபட்டு,இதழியல் துறையில் பணிபுரிந்து, கல்வி உலகில் பேசப்படும் அறிஞரான இவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப்பார்ப்போம்.

இலங்கையின் தமிழ் அடையாளமாகக் கருதப்படும் கைலாசபதி அவர்களின் தந்தையார் இளையதம்பி கனகசபாபதி அவர்கள் மலேசியாவில் அலுவலராகப் பணிபுரிந்தவர்.எனவே க.கைலாசபதி அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 இல் பிறந்தவர்.இவரின் அன்னையார் பெயர் தில்லைநாயகி நாகமுத்து ஆகும்.கைலாசபதிக்குத் தொடக்க கல்வி கோலாலம்பூரில் அமைந்தது.பதின்மூன்று அகவை வரை மலேசியாவில் இருந்தார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில்(1946-47) இலங்கை வந்தார்.

கைலாசபதி அவர்கள் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்,கொழும்பு இராயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) படிப்பில் சேர்ந்து சிறப்பிடம் பெற்றுத் தேர்ந்தார்(1957).இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார்.இப்படிப்பு இவருக்கு மேற்குலக அறிமுகத்திற்கும் வரலாற்றுப் பார்வைக்கும் வழிவகுத்தது.இவர்தம் ஆசிரியர் பெருமக்களுள் கணபதிபிள்ளை,வித்தியானந்தன்இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்கைலக்கழகக் கல்வி கற்ற பிறகு இலங்கையின் புகழ்பெற்ற ஏடான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்.1964-66 ஆம் ஆண்டுகளில் சர்வமங்களம் அவர்கள் தம் கணவருடன் பர்மிங்காம் படிப்புக்கு உதவியாக அங்கு இருந்தார்.க.கைலாசபதி அவர்களின் ஆய்வுப்பணி 1966 ஆகத்து மாதம் நிறைவுற்ற உடன் இலங்கைப் பல்கலைக்கழகப் பணியில் மீண்டும் இணைந்தார்.



முனைவர் க.கைலாசபதி

பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழில் வீரநிலைப்பாடல்கள்(Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வு செய்தவர்.இவருக்குக் கிடைத்த நெறியாளர் உலக அளவில் அறிவாற்றலால் மதிக்கப்படுபவர். இவர் தம் நெறிப்படுத்தலில் உருவான ஆய்வேடு க.கைலாசபதிக்கு முனைவர் பட்டம்பெற்றுத் தந்ததுடன் மேல்நாட்டாருக்குத் தமிழிலக்கியச் சிறப்பை உணர்த்தியது எனலாம்.அதன் பிறகே மேல்நாட்டார் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதைஅறியமுடிகிறது.

ஆய்வுக்காலத்தில் பேராசிரியர் சார்ச் தாம்சன் மணிக்கணக்கில் கிரேக்க,தமிழ் நாகரிகம் பற்றி ஆர்வத்துடன் உரையாடுவது உண்டு.சார்ச் தாம்சன் அவர்களின் மனைவி காத்லின் அவர்களும் அவர்களின் மகளார் லிசு,மெக்(இவரும் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) ஆகியவர்களும் குடும்ப நண்பர்களாகப் பழகியதைச் சர்வமங்களம் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவார்.

பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத்தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


அந்நாளில் இலங்கை முழுவதும் இருந்த அரச கல்வி நிறுவனங்கள் யாவும் இலங்கைப் பல்கைலக்கழகம் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பெற்றது.பல பகுதிகளில் இருந்த கல்வி நிறுவனங்கள் அப் பல்கலைக்கழகத்தின் சார்பு வளாகங்களாகக் கருதப்பட்டன.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் தேவை என்ற நிலை எழுந்தபொழுது திருகோணமலையில் பல்கலைக்கழகம் தொடங்கவும் யாழ்ப்பாணத்தில் தொடங்கவும் என இரு கருத்துகள் அரசியல்வாணரிடையே அந்நாளில் இருந்தது.

திருகோணமலையில் தொடங்கப் படாமல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகமும் தொடக்கத்தில் இலங்கைப் பல்கலைக்கழகம் என்றும் அது யாழ்ப்பாண வளாகம் என்றும் பெயர் பெற்றிருந்தது.1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.

இப்பதவிக்கு அவர் ஆசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் விண்ணப்பித்திருந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் மூத்த பேராசிரியர் என்ற அடிப்படையில் அவர்க்கு முதலில் துணைவேந்தர் பணி கிடைக்காமல் அவரைவிட இளையவரான கைலாசபதிக்குக் கிடைத்ததில் கருத்து வேறுபாடுகள் இன்றுவரை இலங்கையில் உண்டு.ஆயினும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய க.கைலாசபதி அப்பதவிக்குத் தகுதியானவர் என அறிஞருலகம் குறிப்பிடுவது உண்டு.பின்னாளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கல்லகழகத்தின் துணைவேந்தராக விளங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

தென் அமெரிக்கா,ஆத்திரேலியா தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவந்த பெருமைக்கு உரியவர்.1958 இல் இதழாளராக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்தவர்.அப்பயண அனுபவத்தை நான்கு நாடுகளில் நாற்பத்தி நான்கு நாட்கள் என்னும் நூலாக எழுதியவர்.இவர்தம் நூல்கள்,பணிகள்,வாழ்வியல் முழுமைப்படுத்தி வெளிவருவது காலத்தின் தேவையாகும்.

1955 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதன்முதல் இந்தியா வந்தவர். அதன் பிறகு பலமுறை இந்தியா வந்துள்ளார்.செனைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கைலாசபதி அவர்கள் தமிழ்த்துறையில் தமிழாய்வுகள் என்னும் பொருளில் ஆற்றிய உரை அனைவராலும் விரும்பப்பட்டது.க.கைலாசபதியின் நீண்ட நாள் நண்பர்களாகத் தமிழகத்தில் விளங்குபவர்கள் சிதம்பர ரகுநாதன்.குலோத்துங்கன்(வா.செ.கு),கு.அழகிரிசாமி,செயகாந்தன்.

இலங்கையில் பணியாற்றியதுடன் அமையாமல் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்து அறிவார்ந்த மாணவர்களை உருவாக்கியவர்.இவர் மாணவர்களுள் மௌனகுரு,சித்திரலேகா,அம்மன்கிளி முருகதாசு,மனோன்மணி சண்முகதாசு,நுஃமான் உள்ளிட்டவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பல்கலைக்கழகப் பணிபுரிந்ததுடன் இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார்.யுனெசுகோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்
(1970),இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்தவர்.இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர்.பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார்.தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் பணியிலும் ஈடுபாட்டுடன் உழைத்தவர்.

க.கைலாசபதி அவர்களுக்குத் தொடக்கத்தில் திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதல் இல்லை.காலப்போக்கில் இவ்வியக்கத்தின் பணிகளை உணர்ந்து தம் கருத்துகளைச் செம்மைப் படுத்திக்கொண்டார்.


க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.இவருக்கு இலக்கியம்,கர்நாடக இசை,பரத நாட்டியம்,நாடகத்துறைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.தமிழகத்தில் மார்கழி மாதங்களில் நடைபெறும் இசைவிழாக்களுக்கு இவர் வந்து கண்டுகளிப்பது உண்டு.பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பவர். தியாகராச பாகவதர்.சுப்புலட்சுமி,சிதம்பரம் செயராமன்,பி.யு.கிட்டப்பா,சீவானந்தம் பாடல்களை நாடாப் பதிவுக்கருவியில் விரும்பிக் கேட்பது உண்டு.

இலங்கையில் வெளிவந்த தினகரனில் பணிபுரிந்த கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி,அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். பல சிற்றிதழ்கள் இலங்கையில் வெளிவர உதவியுள்ளார்.பல்வேறு இதழ்களில் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் கட்டுரை எழுதியவர்.எனவே இவருக்கு எனத் தனித்த நடை உண்டு. இதழ்களில் எழுதி நல்ல பயிற்சி பெற்றிருந்ததால் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட முடிந்தது.

அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு உடையவராக விளங்கினார்.இந்துக்கல்லூரிமாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய இலெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.சீன அரசின் அழைப்பில் இவர் தம் மனைவி சர்வமங்களம் குழந்தைகள் சுமங்களா,பவித்ரா ஆகியோருடன் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.பல தரமான படைப்புகள் இச்சங்கத்தின் வழியாக வெளிவந்தன.தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு தம் 49 ஆம் அகவையில் 06.12.1982 இல் இயற்கை எய்தினார்.சற்றொப்ப முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார். இன்னும் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பல அரிய ஆய்வு உண்மைகள் கிடைத்திருக்கும்.

Tamil Heroic Poetry நூலும், பண்டைதமிழர் வாழ்வும் வழிபாடும்,அடியும் முடியும்,தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் உள்ளிட்ட நூல்களும் க.கைலாசபதியின் பெருமையை என்றும் பேசிக்கொண்டிருக்கும்.

பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்

01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
02.தமிழ் நாவல் இலக்கியம்,1968
03.Tamil Heroic Poetry,Oxford,1968
04.ஒப்பியல் இலக்கியம்,1969
05.அடியும் முடியும்,1970
06.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
07.இலக்கியமும் திறனாய்வும்,1976
08.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
09.சமூகவியலும் இலக்கியமும்,1979
10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன்இணைந்து),1979
11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)
15.இலக்கியச் சிந்தனைகள்,1983
16.பாரதி ஆய்வுகள்,1984
17.The Relation of Tamil and Western Literatures
18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
19.On Art and Literature,1986
20.இரு மகாகவிகள்,1987(ஆ.ப)
21.On Bharathi,1987
22.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
23.Tamil (mimeo)(co-author A,Shanmugadas)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக