செவ்வாய், 22 மே, 2012

லிங்கன் எழுதிய கடிதம்



மகனின் ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்!

காலங்கள் பல கடந்தாலும், உலக மக்களின் நினைவில் ஆபிரஹாம் லிங்கன் இருக்க காரணம் அவரது ஆட்சித்திறமை மட்டும் காரணமல்ல. யாருக்கும் தீமை செய்யாமல், சட்டம் மற்றும் விதிகளை மீறாமல் அவர் நடந்து கொண்டதே. இதற்கு உதாரணமாக, தன் மகன் படித்த பள்ளி ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதத்தை குறிப்பிடலாம். இதோ அந்த கடிதம்...

'அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களில் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை என் மகனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அவனுக்கு பொறாமை குணம் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது, கோழைத்தனம் என்பதை புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை பள்ளியில் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்கு பயிற்சிகொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுத்த வேண்டும். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம்.

தவறு கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமான தையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக