புதன், 23 மே, 2012

விவேகானந்தர்


         விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதியைத் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம்.

சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன.

இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்:

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்

உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை.

அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது.

தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்.

மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்.

கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்.

சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்.

ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.

உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.

சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்.

ஏழைகளிடமும் பலவீனர்களிடமும் நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்.

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்.
 
 

தேசிய கீதம்...


அடிமை இந்தியர் ரத்தங்களில் சூடும் சொரணையும் ஏற்படுத்திய சக்தி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்தக் கவிதைக்கு உண்டு.

  

1911 டிசம்பர் 27-ம் தேதி இது, முதன்முதலாக இசைக்கப்பட்டது. கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. வங்க மொழியில் எழுதிய தாகூரே, இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் தேசியகீதமாக இசைக்கப்பட்ட இந்தப் பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாகவும் நேருஜி ஏற்றுக் கொண்டார். தீவிரவாதிகளும் மிதவாதிகளும் சேர்ந்து இசைத்த கீதம் இது!
         உலகிலேயே இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய ஒரே கவிஞர், ரவீந்திரநாத் தாகூர். வங்கதேசத்தின் தேசிய கீதமான 'அமர் ஸோனார்' பாடலை இயற்றியவரும் தாகூர்தான்!
'கீதாஞ்சலி'க்காக 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தாகூர் தான், நோபல் பரிசை வென்ற முதல் ஆசியர். குருதேவ் என அன்புடன் அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூருக்கு  மே 7 பிறந்த நாள்!





(பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.

- பாரதியார்)


புலமைக்குச் செய்வோம் புகழ் அஞ்சலி!

சேஃப்டி பின்


கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்றுவரை வடிவமைப்பில் மாறுதல் இல்லாமல் இருப்பது 'சேஃப்டி பின்' மட்டுமே. இது, 1849-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

செவ்வாய், 22 மே, 2012

லிங்கன் எழுதிய கடிதம்



மகனின் ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதம்!

காலங்கள் பல கடந்தாலும், உலக மக்களின் நினைவில் ஆபிரஹாம் லிங்கன் இருக்க காரணம் அவரது ஆட்சித்திறமை மட்டும் காரணமல்ல. யாருக்கும் தீமை செய்யாமல், சட்டம் மற்றும் விதிகளை மீறாமல் அவர் நடந்து கொண்டதே. இதற்கு உதாரணமாக, தன் மகன் படித்த பள்ளி ஆசிரியருக்கு ஆபிரஹாம் லிங்கன் எழுதிய கடிதத்தை குறிப்பிடலாம். இதோ அந்த கடிதம்...

'அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் மனிதர்களில் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை என் மகனுக்கு கற்றுக் கொடுங்கள்.

அவனுக்கு பொறாமை குணம் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக் கொள்வது, கோழைத்தனம் என்பதை புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை பள்ளியில் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்கு பயிற்சிகொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுத்த வேண்டும். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள். போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம்.

தவறு கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமான தையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'


      கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.
 
 
 



நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!
 
 — 

தமிழனாகப் பிறக்க வேண்டும்!






மனிதன் தவிர்க்க வேண்டிய பண்புகளாக, திருக்குறளில் கூறப்பட்டுள்ளவை:

பொறாமை
பிறர் பொருளை கவர நினைத்தல்
புறங்கூறுவது
பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதல்
தீய செயல்களைச் செய்தல்
ஊண் உண்ணுதல்
திருடுவது
கோபம் கொள்வது
துன்பம் செய்வது
உயிர்களைக் கொல்வது
ஆசை
மறதி
சோம்பேறித்தனம்
துன்பம் கண்டு கலங்குவது
கள்ளுண்பது
பிறர் மனைவியை விரும்புவது

இதன் காரணமாகத்தான் திருக்குறளை, ‘வாழ்வியல் நூல்’ என்று அழைக்கிறோம்.


நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார். 

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்.

ரமணரோடு வாழ்ந்த லக்ஷ்மி


இதுவரை பூமியில் நடந்த அழகான மனிதர்களில் ரமணரும் ஒருவர்.

மகிரிஷி புற்று நோயால் இறக்கும் தருவாயில் இருந்தார்.
அந்த நேரத்திலும் மகிரிஷியின் முகம் புன்னகையால் நிறைந்து இருந்தது.
இதைப் பார்த்த மருத்துவர்கள்,பக்தர்களும் ஆச்சரியப்பட்டனர்.ஒரு மருத்துவர் எப்படி இந்த நேரத்திலும்,இத்தனை வலியிலும் புன்முறுவலுடன் இருக்கம் முடிகிறது என்று கேட்டார்.

அதற்கு ரமணரோ,
நான் ஒரு சாட்சி. நீ எப்படி இந்த உடம்பை பார்க்குகிறாயோ{என்னை},அதே போல நானும் என்னை பார்க்கிறேன்.என்ன வித்தியாசம் எனும் போது இந்த உடல் படும் பெருந்துன்பத்தை நீ வெளியில் இருந்து பார்க்கிறாய், நானோ உள்ளேயிருந்து பார்க்கிறேன்,அம்புட்டு தான் என்றார் .

ஆரம்ப கட்டத்தில் முதுகில் அந்த புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார் என்றால் எந்த அளவு தன்னுள் ஆழமாக சென்று உயிரின் மையத்தை அடைந்து இருப்பார்.{ நினைக்கவே ஒரு கணம் சிலிர்க்குது}

பண்டிதர்- பாமரர்- ஏழை- பணக்காரர்- குழந்தை- கிழவர் என்ற பேதமின்றி எல்லோரும் அவரைத் தரிசித்தார்கள். எல்லோரையும் ஒரே விதமான புன்னகையுடனேயே ரமணர் வரவேற்றார். எல்லா ஜீவராசிகளும் அவரோடு நெருக்கமாயிருந்தன. அணில்கள் அவர் சமிக்ஞைக்குக்{உணர்வுகளுக்கு} கட்டுப்பட்டு அவர் மேனியின் மேல் ஓடி விளையாடின. குரங்குகள் அவர் கையால் பழங்களை வாங்கி உண்டன. அவற்றின் பிரச்சினைகளை ரமணர் பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார். மயில்கள் அவர் முன் ஆனந்தமாய் நடனமாடின.

20 ஆண்டுகளாய் ரமணரோடு வாழ்ந்த லக்ஷ்மி என்கிற ஆசிரமப் பசு தன்னை யார் துன்புறுத்தினாலும் தொழுவத்திலிருந்து அறுத்துக்கொண்டு ரமணரின் அறைக் கதவின் அருகில் புகார் சொல்லும் பாவத்துடன் வந்து நிற்பது அங்குள்ளோருக்கு அதியமான காட்சியாய் இருக்கும். ரமணாஸ்ரமத்தில் மான் - காகம்- நாய்-பசு{லக்ஷ்மி} ஆகிய நான்கின் சமாதிகளும் இருக்கின்றன.